நான்தான்...பூமி பேசுகிறேன்.
ஏ... மனிதா உரக்கக் கூறுகிறேன்
என் புலம்பல்கள் கேள்
என்னில் அழகு சேர்க்க
எத்தனை நான் படைத்தேன்
ஓரறிவாம் உயிர்கள் படைத்தேன்
என்னில் பசுமை ஆடை போர்த்தி
என் உடல் உள்ளம் குளிரச் செய்தது
ஈரறிவாம் உயிர்கள் படைத்தேன்
என்னை இதமாய் வருடி
என் மீது ஊர்ந்து
என்னைக் கிளர்ச்சியூட்டியது
மூவறிவாவாம் உயிர்கள் படைத்தேன்
என்னில் சுறுசுறுப்பையும்
ஒற்றுமையையும் தந்தது
நான்கறிவாம் உயிர்கள் படைத்தேன்
மூவறிவும் வாழ வழி செய்து
ரீங்காரமிடும் இசை தந்தது
ஐந்தறிவாம் உயிர்கள் படைத்தேன்
நான்கு அறிவும் நலமோடு வாழ
நான்கு அறிவு உயிர்களும் பெருக
நாளும் வழி செய்தது
ஐந்து அறிவு உயிர்கள் அனைத்தும்
அகிலத்தை அடைகாத்து
ஆச்சரியங்கள் அனைத்தையும்
அற்புதமாய் உருவாக்கியது
எண்ணிலடங்காக் காடுகளாய்
எல்லையில்லா மலைகளாய்
எல்லா இடங்களிலும் ஆறுகளாய்
அத்தனை ஆச்சரியங்களையும்
ஐந்து அறிவு உயிரினங்களும்
என்னில் உருவாக்க
எனக்கோ இன்னும் பேராசை
என்னை இன்னும் மெருகேற்ற
அளவில்லாப் பேராசையுடன்
ஆறறிவு உயிராம் மனிதன் படைத்தேன்
அளவில்லா ஆச்சரியங்கள் தந்தாய்
அன்பால் இதயங்களில் நுழைந்தாய்
எனக்குத் தெரியாமல்
என்னில் இருந்தவை எல்லாம்
எப்படியோ வெளியில் கொண்டு வந்தாய்
விஞ்ஞானத்தால் விண்ணைப் பிளந்தாய்
விதியை மதியால் வென்றாய்
இருளை ஒளிபெறச் செய்தாய்
கனவுகளை மெய்ப்பித்தாய்
கற்பனைகளை உண்மையாக்கினாய்
நாகரீகத்தை உருவாக்கினாய்
நகரங்களை உருவாக்கினாய்
நாடுகளை உருவாக்கினாய்
இயற்கையை இறைவனாக்கினாய்
இதயம் கனிந்து வணங்கினாய்
படிப்படியாய் உயர்ந்து
பரிணாம வளர்ச்சி அடைந்ததாலோ
பொறுமையின் சின்னமாம் பூமி
என் பெயர் என்பதாலோ
பாதகம் செய்யத் துணிந்தாய்
காடழித்து களிப்புற்றாய்
மணல் விற்று மனமகிழ்ந்தாய்
மலை உடைத்து மகிழ்ச்சி கொண்டாய்
நதிகளை நாசமாக்கினாய்
அருவிகளை அடகு வைத்தாய்
ஐந்தறிவு உயிர் வரை
அனைத்தையும் அடிமையாக்கினாய்
பொறுமையாய் இருந்ததால்
பூக்காடாயிருந்த பூலோகத்தை
புதை குழிக்குள் புகுத்தி விட்டாய்
இரசாயனங்களால் மண்வளம் கெடுத்தாய்
கலப்பினங்களால் மரபு அழித்தாய்
ஆயுதங்களால் என் மீது போர் தொடுத்தாய்
ஆராய்ச்சி என்ற பெயரில்
அணுகுண்டு சோதன
என்னுள்ளும் நடத்தினாய்
என்னுடைய துன்பத்தை
எப்படியேனும் வெளிக்காட்ட
ஏதேதோ அவதாரம்
எடுத்தேன் நானும்
புயலாய் பூகம்பமாய்
வெள்ளமாய் வெப்பமாய்
கதிர்வீச்சாய் கடல் சீற்றமாய்
எதையும் பொருட்படுத்தாமல்
உன் செயல்கள் தொடர்ந்தாய்
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்
உலகம் செழிக்க
உலகின் உயிர்கள் வாழ
உன் சந்ததிகள் வாழ
ஏய் ஆறறிவு மனிதா
எனக்காக ஒன்றை மட்டும் செய்
எதையும் தயவுசெய்து செய்யாதே.
கவிஞர் இரா. சுப்பிரமணியன், தமிழ்நாடு
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
2 Comments
மிகச் சிறந்த கவிதை. இறுதி வரியான ஏய் ஆறறிவு மனிதா எனக்காக ஒன்றை மட்டும் செய்.. எதையும் தயவு செய்து செய்யாதே... என்னும் வரிகள் மனதை உருக்குவதாக உள்ளன. கவிஞருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteசிறப்பு நண்பரே 🤝🤝🎉🌹
ReplyDelete