நவீன மனிதன் சிறுகதை போட்டி. Short Story Competition Modern Man - 2023 - Sltamil

Short Story Competition Modern Man - 2023

சிறுவயதில் இருந்தே நகரத்திலேயே வாழ்ந்த அந்த 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் எழில் கொஞ்சும் கிராமமான தன்னுடைய மாமா வீட்டிற்கு விவரம் தெரிந்த பிறகு இப்பொழுதுதான்  வந்திருந்தான். விவரம் தெரியாத சிறுவயதில் பல முறை இங்கே வந்திருக்கிறான். சூரிய உதயத்திற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்தது அவனது வாழ்க்கையில் சில முறைதான். அதில் அதிசயமான இந்த நாளும் ஒன்று. கிராமங்களின் அழகையும், இயற்கையையும், புத்தகங்களிலும், காணொளிக் காட்சிகளிலும்  மட்டுமே பார்த்திருந்த  இளைஞன் அவன். கிராமங்களின் அழகையும் இயற்கையின் அழகையும் கண்கள் வழியே மட்டுமே காட்சிகளாக பார்த்திருந்த அவன் இன்று உணர ஆரம்பித்தான். 

பாடும் பறவைகளின் சத்தமும், விதவிதமான பறவைகளின் சலசலப்பு காதுகளில் ஒரு மாறுபட்ட இன்னிசைக் கச்சேரியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இன்னிசைக் கச்சேரியில் மூழ்கியிருந்த அவனது உள்ளம் மரங்களின் கிளைகளின் இலைகளினூடே சூரிய உதயத்தின் தொடக்கமாய் சூரியக் கதிர்கள் அவன் முகத்தில் அடிக்க புதியதோர் அனுபவம் அவனை பரவசப்படுத்தியது. இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே கைபேசியில் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து கொண்டிருந்த அவனை அவனுடைய அத்தை அழைத்தாள் "பிரவீன் காபி போட்டு பத்து நிமிஷம் ஆச்சு ஆறிடப் போகுது வந்து சாப்பிடு" என்று கூப்பிட்டதுகூட தெரியாமல் தன்னுடைய கைபேசியில் இயற்கையின் அழகை படம் எடுத்துக் கொண்டிருந்தான் பிரவீன். பிரவீன் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அனைவர் வாயிலும் பிரவீனை பற்றிய புராணமே ஓடிக் கொண்டிருந்தது. அவன் மிகுந்த அறிவாளி என்றும் திறமைசாலி என்றும் அவன் புகழ் பாடிக்கொண்டே இருந்தார்கள் அந்த வீட்டின் தாத்தா, பாட்டி அவனுடைய மாமா, அத்தை என அனைவரும். அவன் நகரத்தில் வளர்ந்த விதத்தையும், படித்த விதத்தையும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்ததோடு பிரவீனின் அத்தை, மாமா இருவரும் தங்கள் மகன் வெற்றியும்   பிரவீன் போலவே வர வேண்டும் என்று விரும்பினார்கள். 

வெற்றி ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மிகவும் சுட்டி எதையும் ஆர்வமுடன் கவனிப்பவன். அன்றும் அப்படித்தான் பிரவீனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே இருந்தான் வெற்றி. ஒரு வழியாகத் தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்திக் கொண்ட பிறகு வீட்டிற்குள் வந்து காபியைக் குடிக்க ஆரம்பித்தான் பிரவீன். காபியைக் குடித்து கொண்டிருக்கும்பொழுது "காலையிலிருந்து செடி, செத்தை எல்லாம் படம் எடுத்துட்டு இருக்கியே பிரவீன் அத வச்சு என்ன செய்யப் போற" என்றாள் அத்தை. "என்ன ஆன்ட்டி இப்படி சொல்லிட்டீங்க இந்த படங்களை எல்லாம் இணையதளங்கள்ல பதிவேற்றம் செஞ்சிருவேன் அதன் பிறகு அத பாக்குற பார்வையாளர்களோட எண்ணிக்கை அதை விரும்புற பார்வையாளர்களோட எண்ணிக்கை நமக்கு கொடுக்குற விமர்சனம் இதெல்லாம் வச்சு நமக்கு ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கும் மேலும் நமக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்" என்றான் பிரவீன். மேலும் "இப்ப இருக்கிற பார்வையாளர்கள்  எல்லாம் இது போன்ற கிராமங்கள்ல நடக்கிற தற்செயலான சின்னச் சின்னக் காட்சிகள், இயற்கையின் அழகு எல்லாத்தையும் தான் ரசிக்கிறாங்க" என்றான் பிரவீன். "பாத்துக்க வெற்றி உன்னோட மச்சான் எவ்வளவு புத்திசாலியா இருக்கிறான் என்று இது போலவே நீயும் எல்லா விஷயத்துலயும் புத்திசாலியா இருக்கணும்" என்றாள் வெற்றியின் அம்மா. பிரவினை போலவே வெற்றியும் புத்திசாலியாகவும் படிப்பில் கெட்டிக்காரனாகவும் வரவேண்டும்  என்பது வெற்றியின் அம்மாவின் ஆசை. சிறிதுநேரத்தில் காலை உணவைத் தயார் செய்த பிறகு எல்லோரும் சாப்பிட வாங்க என்றாள் நிச்சயம் அம்மா. 

கிராமங்களில் தரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்றவாறு அனைத்து சாப்பாட்டு பொருள்களையும் பாத்திரங்களில் எடுத்து அனைவரையும் உட்கார வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தாள் வெற்றியின் அம்மா. எல்லோருக்கும் உணவு பரிமாறியபின் சாப்பிடப் போகும் நேரத்தில் தரையில் இருந்து எழுந்த பிரவீன் பிறகு "கொஞ்ச நேரம் எல்லாரும் நில்லுங்க இந்தக் காட்சி அருமையா இருக்கு இது அப்படியே என்னோட செல்லுல நான் வீடியோவா எடுத்துக்கிறேன்" என்று போய் அந்தக் காட்சியை படம் எடுக்கத் தொடங்கினான். இதக் கூடவா படம் எடுக்கணும் என்றான் வெற்றி. "என்ன இப்படி கேட்டுட்ட வெற்றி இந்த மாதிரி வீடியோதான் இப்போ லைக் அள்ளுது" என்றான் பிரவீன்.  எல்லாவற்றையும் தன்னுடைய செல்போனில் படம் எடுத்த பிறகு அனைவரும் சாப்பிடுவதற்கு அனுமதி கொடுத்தான் பிரவீன்.

 அனைவரும் சிரித்துக் கொண்டே தங்களுடைய காலை உணவை முடித்துக் கொண்டனர். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தது கிராமத்தில் உள்ள தோப்புகள், வயல்கள், கண்மாய்கள் என அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த பிரவீன் அனைத்தையும் தன்னுடைய செல்போன் வழியாக படம் எடுத்தல், காணொளி காட்சியாக பதிவு செய்தல் என்று நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான். அன்று இரவு அனைவரும் இரவு உணவிற்காக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அனைவரும் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டே. இரவு உணவை உண்டு முடித்தனர். 

அதன்பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பிரவீனிடம் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என அனைவரும் அவனது நகரத்து வாழ்க்கை, அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி கேட்டனர். பின்னர் பிரவீன் நகரத்தில் உள்ள வாழ்க்கை சூழ்நிலைகளையும் அங்கு உள்ள பொழுதுபோக்குகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினான். "நாங்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு தியேட்டருக்கு புதிய படங்கள் பார்க்க செல்வோம்"என்றான் பிரவீன்."ஒவ்வொரு வாரமும் கட்டாயம் போவீங்களா" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் வெற்றி. மேலும் "எங்களுக்குத் தான் அந்த வாய்ப்பே கிடைக்கல" என்று தன்னுடைய மனக்குமுறலை வருத்தத்துடன் கூறினான் வெற்றி. மேலும் விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்வோம், மால்க்கு போவோம், கண்காட்சிகளுக்கு செல்வோம்" என்று வரிசைப்படுத்திக் கொண்டே சென்றான் பிரவீன். 

இதையெல்லாம் கேட்கும் பொழுது வெற்றிக்கு தானும் நகரத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் தற்போது தான் செல் போன் மூலமாக வீடியோவாக எடுத்து இணையதளங்களில் பதிவேற்றப்படும் தன்னுடைய வீடியோக்களை அனைவரிடமும் காட்ட ஆரம்பித்தான். இதோ பாருங்க மாமா அன்னிக்கு காலை சாப்பாட்டை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டது எவ்வளவு லைக் வாங்கி இருக்கு பாருங்க எவ்வளவு பேர் ஷேர் பண்ணி இருக்காங்க பாருங்க என்று பிரவீன் வீடியோக்களை காட்டினான். அத்தைக்கு ஆச்சரியம் நம்மளுடைய சாப்பாட்டை இவ்வளவு பேர் பார்த்து லைக் செய்து இருக்கிறார்களா என்று மனதிற்குள் ஏகப்பட்ட சந்தோஷம். இத பாருங்க நம்ம வீட்டு தோட்டம் எவ்வளவு பேரு பாத்து லைக் பண்ணி இருக்கிறார்கள் பாருங்கள் என்றான் பிரவீன். 

அதனைப் பார்த்த தாத்தா பாட்டி மற்றும் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஆச்சரியத்தில் மலைத்துப்போய் அமர்ந்து இருந்தனர். மேலும் தான் கிராமத்திற்கு வந்த பிறகு எடுத்து இணையத்தில் போடப்பட்ட அத்தனை வீடியோக்களையும் எல்லோரிடமும் காட்டி ஆச்சரியப்படுத்தினான். "இதையெல்லாம் நீ செய்யறதுனால உனக்கு என்ன லாபம்" என்று கேட்டார்  தாத்தா. "என்ன தாத்தா இப்படி சொல்லிட்டீங்க நாம பதிவிடுற வீடியோவ எவ்வளவு பேர் பார்க்கிறாங்களோ மற்றும் எவ்வளவு பேர் லைக் பண்றாங்களோ அதுக்கு ஏத்ததுபோல நமக்கு சற்று பணம் வருமானமாக கிடைக்கும்"என்றான் பிரவீன். அப்போ அதுக்காகத்தான் நீ எங்கே போனாலும் செல்போன்ல வீடியோ படம் எடுக்கிறியா என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் வெற்றியின் அம்மா. "ஆமா அத்தை இந்த மாதிரி கிராமங்கள்ல கிடைக்கிற நிகழ்ச்சிகள் எதார்த்தமான நிகழ்வுகள் இது மாதிரி எல்லாம் நகரத்தில் கிடைக்காது அதனாலதான் இப்போ நான் கிராமத்துக்கு வந்து இருக்கிற நேரத்துல கிடைக்கிற எல்லா வீடியோக்களையும் பதிவு செஞ்சு இணையத்தில் பதிவிட்டுக்கொண்டு இருக்கேன்" என்றான் பிரவீன். "இப்போதான் முதன் முதலில் கிராமத்தில் உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகளை எல்லாம் வீடியோ பண்ணி அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா போகுது" என்றான் பிரவீன். தன் மாமாவிடம் "நாளைக்கு ஒரு வித்தியாசமான இடத்துக்கு போகலாம்னு இருக்கேன் ஏதாவது வித்தியாசமான பிளேஸ் இருந்தா  சொல்லுங்க அங்கிள்" என்றான் பிரவீன். 

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டின் சுவரில் ஓடிய பல்லியை படம் எடுக்க தொடங்கியதோடு "ஜஸ்ட் மிஸ் அங்கிள்"என்றான். "என்னாச்சு பிரவீன்" என்றார் மாமா. "ஒன்னும் இல்ல அங்கிள் அந்தப் பல்லி அந்த சின்ன பூச்சியைப் பிடிக்க போய் பிடிக்கிற டயத்துல அத படம் எடுக்கலாம்ணு போனேன் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு இந்த மாதிரி சின்ன சின்ன அழகான விஷயங்களை  போட்டா அல்லது வீடியோ எடுத்துப் போட்டா அதிகமான லைக் வாங்கலாம் நம்மளோட டார்கெட் ரீச் பண்ணலாம் அங்கிள்" என்றான் பிரவீன். 

சரிஅங்கிள் நேரமாச்சு நான் தூங்க போகிறேன் காலையில ஏதாவது ஒரு இடத்துக்கு நான் விசிட் பண்ற மாதிரி சொல்லுங்க குட் நைட்" என்று கூறி படுக்கும் அறைக்குப் புறப்பட்டான் பிரவீன். அதன் பிறகு பேசிக் கொண்டிருந்த வெற்றியின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோர் பிரவீனை பற்றி மிகவும் பிரமிப்பாகவும் அவனை போல் வெற்றியையும் வளர்க்க வேண்டும் என்றும் நகரத்திற்கு சென்று படிப்பைத் தொடர வேண்டும் என்றும் பிரவினை பற்றியே பேசிக்கொண்டே வெகு நேரம் உறங்காமல் இருந்தனர். இது எதுவும் தெரியாமல் அதே இடத்தில் குழந்தையாய் தூங்கிக் கொண்டிருந்தான் வெற்றி. வெற்றியின் தலையை தடவியவாறு அவருடைய அம்மா பிரிவீனை போலவே நீயும் புத்திசாலியா நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் செல்லம் மேலும் அவனிடம் இருந்து  நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வெற்றியின் தூங்கும் முகம் பார்த்து தனக்குத்தானே பேசிக் கொண்டாள். பிரவீனை பார்க்கும் போதெல்லாம் அனைவரிடமும் அன்பு கொண்ட ஒரு மனிதனாகவும் இயற்கை நேசிக்கும் ஒரு மாமனிதனாகவும் கல்வியில் சிறந்தவனாகவும் மிகுந்த புத்திசாலியாகவும் தெரிந்தான். 

எனவேதான்வெற்றியின் அம்மாவுக்கு.  பிரவீனைப் போலவே தன்னுடைய மகன் வெற்றியும் வர வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்கிறாள் வெற்றியின் அம்மா. காலை பொழுது விடிந்தது அன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் எழுந்து அமர்ந்து இருக்க வெற்றியின் அம்மா அனைவரிடமும் காபி டம்ளர்களை நீட்டினாள். அனைவரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரவீன் பேச்சை ஆரம்பித்தான் "அங்கிள் இன்னைக்கு சண்டே தானே பக்கத்துல என்னைய ஏதாவது ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போங்களே"என்றான். "சரி பிரவீன் காலை சாப்பாடு முடிந்தவுடன் கிளம்புவோம் ஒரு சில இடங்களுக்கு உன்னை நான் அழைத்துச் செல்கிறேன்" என்றார் வெற்றியின் அப்பா."அப்பா நானும் வருகிறேன்" என்றான் வெற்றி."சரி போகலாம் என்றார்" வெற்றியின் அப்பா. காலை உணவு முடிந்தவுடன் பிறவின் வெற்றி வெற்றி என் அப்பா மூவரும் பைக்கில் கிளம்பினர். வெற்றியின் அம்மா மூவரையும் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள். 

மாலை ஐந்து  மணி ஆனது மூவரும் மிகவும் களைப்பாக வீடு திரும்பினர். "போன வேலை என்னாச்சு எங்கும் நல்லா சுத்தி பார்த்தீங்களா நீங்க  சுத்தி பார்க்க இங்க என்ன இருக்கு" என்றாள் வெற்றியின் அம்மா. நிறைய இருக்கு ஆன்ட்டி என் வாழ்க்கையில இன்றைய நாளை மறக்கவே முடியாது புதுசு புதுசா நிறைய என்னால பார்க்க முடிந்தது பட் அங்கிளும் வெற்றியும் எதுலயுமே ஈடுபாடு இல்லாம இருந்தாங்க என்றான் பிரவீன். நேரம் கடந்தது இரவு சாப்பாட்டிற்கான நேரம் வந்தது அனைவரும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றனர். வெற்றி என் அப்பாவும் அம்மாவும் மட்டும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். "இன்னைக்கு பிரவீன் கூட போயிட்டு வந்த அனுபவம் எப்படி" என்றாள் வெற்றியின் அம்மா. "என்னமோ போ அவன் என்ன செய்கிறான் என்றே புரியவில்லை அவன் செய்றது நல்லதா கெட்டதா என்று எனக்கு குழப்பமா இருக்கு நீ வேற நம்ம பையனையும் அவன மாதிரியே ஆக்கணும்னு ஒத்த காலில் நிற்கிற" என்றார் வெற்றியின் அப்பா. நீங்கள் எப்பவுமே இப்படித்தான் யாராவது புத்திசாலியா இருந்தா உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்றாள் வெற்றியின் அம்மா. "உனக்கு எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது" என்றார் வெற்றியின் அப்பா. "டவுன்ல நாகரிகமா வளந்த பையன் அவன குறை சொல்லாதீங்க" அவன் எல்லாம் சரியாத்தான் செய்கிறான் என்று சொன்ன வெற்றியின் அம்மாவிடம் எந்த மறு பேச்சும் பேசாமல் உறங்கச் சென்றார் வெற்றியின் அப்பா. மறுநாள் காலை பொழுது விடிந்தது அனைவரும் எழுந்து அவரவர் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். 

சமையலறையில் வெற்றியின் அம்மா சமைத்துக் கொண்டு இருந்தாள். வெற்றியின் அப்பா பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடைக்கு சென்று சென்றிருந்தார்.  வீட்டுக்கு முன்னால் தாழ்வாரத்தில் கட்டப்பட்டிருந்த குருவி கூடுகளில் குருவிகள் நுழைவதையும் வெளியே செல்வதையும் பார்ப்பதும் படம் எடுப்பதுமாய் அமர்ந்திருந்தான் பிரவீன். அவன் அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. தாத்தாவும் பாட்டியும் சற்று தூரத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென வெற்றியின் அலறல் சத்தம் வேண்டாம் மச்சான்... என்னைய விடு... என்னைய விடு... என்ற சத்தம் கேட்டு வாயிலுக்கு ஓடி வந்தாள் சமையலறையில் இருந்த அம்மா கதவு அருகில அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள் யாரைப் போல் தன் மகன் வெற்றியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தாளோ அவனின் செயலைப் பார்த்து. அங்கே பற்கள் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட வாய் பிளந்து கண்களில் கொடூரம் நிரம்ப நிற்கிற பூனை. பூனையைச் சுற்றி பஞ்சாய் பறக்கிறது கீழே தலையும் உடலும் இரண்டு துண்டுகளாய் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு  கிடந்த சிட்டுக்குருவியின் சிறகுகள். 

என்னை விடு... என்னை விடு... என்று சிட்டுக்குருவியை காப்பாற்ற கண்ணீருடன் துடித்துக் கொண்டிருந்த வெற்றியை நகர விடாமல் ஒரு கையால் பிடித்துக் கொண்டே மற்றொரு கையில் இருந்த செல்போன் மூலம் மேற்கண்ட காட்சியை ரசித்துக்கொண்டே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் பிரவீன்...

நன்றி - இரா. சுப்பிரமணியன்

வணக்கம் நண்பர்களே!

நமது சிறுகதை தளத்தில் இந்த வருடம் சிறுதைப் போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் சிறுகதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் சிறுகதைகளை அனுப்பி வைக்கலாம்.

சிறுகதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments