காலத்தின் சக்கரம் கடுகதியாய் சுழன்றோட
கோலங்கள் மாறின,என் கோணங்களும் மாறின
ஞாலத்தில் சிறந்த கடவுள் தான் யாரென
ஆழமாய் மனதில் கேள்விகளும் எழுந்தன
இமயத்தில் ஏறி இல்லையென திரும்பி
ஈர்க்கின்ற மலரினையும் இனிமையாய் கேட்டேன்
உலகையே சுற்றும் கடலையும் கண்டு
ஊர்ந்திடும் நதியிடம் தந்தியும் அனுப்பினேன்
உறங்காத வானும் புன்சிரிப்பாய் சிரித்திட
உண்மையை தேடி என் கால்கள் பறந்தன
முகிலையும் மறித்து உளவு அனுப்பியும்
முடியாத செயல் என்று முடிவும் சொன்னது
அண்டம் முழுதையும் ஆட்டிப்படைக்கும்
ஆண்டவன் யாரென அறிந்திட அலைந்தேன்
கண்டம் எங்கும் களைத்து திரிந்தும்
ஆண்டவன் காலடி கண்ணிலும் படவில்லை
சற்றே ஓய்ந்து தரணியை பார்த்தேன்
உற்ற உறவுகள் உண்ணாது இருக்க
பற்று அற்று அவர்களை தனியே விடாது
உணவு பகிர்ந்திடும் உள்ளமும் கண்டேன்
வறுமையில் வாடி வதங்கிய பிஞ்சுகள்
கல்வியை கடினமாய் தூரமாய் தள்ள
சிறுமையும் படித்திட வேண்டும் என்றே
பள்ளிக்கு உதவும் பல உயிர்களை கண்டேன்
சாதியும் மதமும் அறவே இன்றி
ஏழ்மை சனத்தையும் சமமாய் எண்ணி
தாயாய் பிள்ளையாய் பார்த்திடும் மனிதரின்
வாழும் மனதிலே அருளையும் அறிந்தேன்
கடவுளின் வீடு கோயில் தான் என்று
கணித்திடும் மானிடர் இன்றும் தான் உண்டு
மனத்தினுள் நானும் உணர்ந்தேன் உண்மையை
உத்தமர் உள்ளத்தில் கண்டேன் கடவுளை.
நன்றி - சங்கவிகா ( கவிபாரதி)
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments