Choose the Best Poem.
SL Tamil 2023 கவிதை போட்டி நிறைவடைந்துள்ளது.
2023 கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்
5 கவிதைகளும் கீழே விரிவாக தரப்பட்டுள்ளது முழுமையாக படித்து மிகச் சிறந்த கவிதையை தெரிவு செய்யுங்கள்
01 - கண்டேன் கடவுளை - I Saw God - Sltamil
காலத்தின் சக்கரம் கடுகதியாய் சுழன்றோட
கோலங்கள் மாறின,என் கோணங்களும் மாறின
ஞாலத்தில் சிறந்த கடவுள் தான் யாரென
ஆழமாய் மனதில் கேள்விகளும் எழுந்தன
இமயத்தில் ஏறி இல்லையென திரும்பி
ஈர்க்கின்ற மலரினையும் இனிமையாய் கேட்டேன்
உலகையே சுற்றும் கடலையும் கண்டு
ஊர்ந்திடும் நதியிடம் தந்தியும் அனுப்பினேன்
உறங்காத வானும் புன்சிரிப்பாய் சிரித்திட
உண்மையை தேடி என் கால்கள் பறந்தன
முகிலையும் மறித்து உளவு அனுப்பியும்
முடியாத செயல் என்று முடிவும் சொன்னது
அண்டம் முழுதையும் ஆட்டிப்படைக்கும்
ஆண்டவன் யாரென அறிந்திட அலைந்தேன்
கண்டம் எங்கும் களைத்து திரிந்தும்
ஆண்டவன் காலடி கண்ணிலும் படவில்லை
சற்றே ஓய்ந்து தரணியை பார்த்தேன்
உற்ற உறவுகள் உண்ணாது இருக்க
பற்று அற்று அவர்களை தனியே விடாது
உணவு பகிர்ந்திடும் உள்ளமும் கண்டேன்
வறுமையில் வாடி வதங்கிய பிஞ்சுகள்
கல்வியை கடினமாய் தூரமாய் தள்ள
சிறுமையும் படித்திட வேண்டும் என்றே
பள்ளிக்கு உதவும் பல உயிர்களை கண்டேன்
சாதியும் மதமும் அறவே இன்றி
ஏழ்மை சனத்தையும் சமமாய் எண்ணி
தாயாய் பிள்ளையாய் பார்த்திடும் மனிதரின்
வாழும் மனதிலே அருளையும் அறிந்தேன்
கடவுளின் வீடு கோயில் தான் என்று
கணித்திடும் மானிடர் இன்றும் தான் உண்டு
மனத்தினுள் நானும் உணர்ந்தேன் உண்மையை
உத்தமர் உள்ளத்தில் கண்டேன் கடவுளை.
02 - காதலில் மறந்தேன் - I forgot in love
நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன்
என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்;
எது வேண்டுமானாலும் நடக்கட்டும் பார்க்கிறேன்;
உலகத்திடம் நான் பயப்படமாட்டேன்;
நான் உன்னிடம் காதல் செய்தே தீருவேன்;
காதல் வந்துவிட்டால் தூக்கமே வராது, அமைதி இருக்காது;
ஒரு முறை காதலை சொல்லிவிட்டால் மறக்கவும் மனம் வராது,
பிரியவும் மனம் வராது;
நீ என்னை அடித்தால், திட்டினால் கூட தாங்கி கொள்வேன்;
ஆனால் உன்னை அவ்வளவு எளிதாக மறக்கமாட்டேன்;
நீ என்னை வெறுத்துவிட்டால், தேம்பி தேம்பி அழுவேன்;
நீ என்னை மறந்துவிட்டால், உயிரை விட்டுவிடுவேன்;
நான் உன்னை இன்னொரு அம்மாவாக நினைக்கிறேன்;
உன் அன்பு, பாசம், உறவுக்காக ஏங்குகிறேன்;
நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன்
என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்;
03 - என்னவளின் அழகு - Ennavalin Azhagu
திரையரங்கில் உள்ள திரைசீலை
போன்ற அவளின் விழிகளும்..!!
வேடனின் வில்லிலிருந்து புறப்படும் அம்பை
போன்ற அவளின் ஒற்றை விளி பார்வைகளும்..!!
காற்றில் அலை பாய்ந்த அவளின் கூந்தல் முடிகளும்..!!
அவள் காதோரங்களில் கதைத்துக்
கொண்டிருக்கும் கம்மல்களும்..!!
சேட்டை பிடித்த அவளின் செயல்களும்..
அவள் ஆசையாக அள்ளித் தந்த முத்தங்களும்..!!
சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்ற அவளின் பற்களும்..!!
நான் பிடிக்க வேண்டிய கையை பிடித்திருக்கும் வளையல்களும்...!!
அவள் கால்களுடன் உறவாடி கொண்டிருக்கும் கொலுசுகளும்...!!
என் இதய அறையில் இடம் பிடிக்கிறது..!!
என் வாழ்க்கையில் இடம் பிடிப்பதற்கு அல்ல...
என் வாழ்க்கையாகவே இடம் பிடிப்பதற்கு...!
04 - நான்தான் பூமி பேசுகிறேன் - I Speak Earth
ஏ... மனிதா உரக்கக் கூறுகிறேன்
என் புலம்பல்கள் கேள்
என்னில் அழகு சேர்க்க
எத்தனை நான் படைத்தேன்
ஓரறிவாம் உயிர்கள் படைத்தேன்
என்னில் பசுமை ஆடை போர்த்தி
என் உடல் உள்ளம் குளிரச் செய்தது
ஈரறிவாம் உயிர்கள் படைத்தேன்
என்னை இதமாய் வருடி
என் மீது ஊர்ந்து
என்னைக் கிளர்ச்சியூட்டியது
மூவறிவாவாம் உயிர்கள் படைத்தேன்
என்னில் சுறுசுறுப்பையும்
ஒற்றுமையையும் தந்தது
நான்கறிவாம் உயிர்கள் படைத்தேன்
மூவறிவும் வாழ வழி செய்து
ரீங்காரமிடும் இசை தந்தது
ஐந்தறிவாம் உயிர்கள் படைத்தேன்
நான்கு அறிவும் நலமோடு வாழ
நான்கு அறிவு உயிர்களும் பெருக
நாளும் வழி செய்தது
ஐந்து அறிவு உயிர்கள் அனைத்தும்
அகிலத்தை அடைகாத்து
ஆச்சரியங்கள் அனைத்தையும்
அற்புதமாய் உருவாக்கியது
எண்ணிலடங்காக் காடுகளாய்
எல்லையில்லா மலைகளாய்
எல்லா இடங்களிலும் ஆறுகளாய்
அத்தனை ஆச்சரியங்களையும்
ஐந்து அறிவு உயிரினங்களும்
என்னில் உருவாக்க
எனக்கோ இன்னும் பேராசை
என்னை இன்னும் மெருகேற்ற
அளவில்லாப் பேராசையுடன்
ஆறறிவு உயிராம் மனிதன் படைத்தேன்
அளவில்லா ஆச்சரியங்கள் தந்தாய்
அன்பால் இதயங்களில் நுழைந்தாய்
எனக்குத் தெரியாமல்
என்னில் இருந்தவை எல்லாம்
எப்படியோ வெளியில் கொண்டு வந்தாய்
விஞ்ஞானத்தால் விண்ணைப் பிளந்தாய்
விதியை மதியால் வென்றாய்
இருளை ஒளிபெறச் செய்தாய்
கனவுகளை மெய்ப்பித்தாய்
கற்பனைகளை உண்மையாக்கினாய்
நாகரீகத்தை உருவாக்கினாய்
நகரங்களை உருவாக்கினாய்
நாடுகளை உருவாக்கினாய்
இயற்கையை இறைவனாக்கினாய்
இதயம் கனிந்து வணங்கினாய்
படிப்படியாய் உயர்ந்து
பரிணாம வளர்ச்சி அடைந்ததாலோ
பொறுமையின் சின்னமாம் பூமி
என் பெயர் என்பதாலோ
பாதகம் செய்யத் துணிந்தாய்
காடழித்து களிப்புற்றாய்
மணல் விற்று மனமகிழ்ந்தாய்
மலை உடைத்து மகிழ்ச்சி கொண்டாய்
நதிகளை நாசமாக்கினாய்
அருவிகளை அடகு வைத்தாய்
ஐந்தறிவு உயிர் வரை
அனைத்தையும் அடிமையாக்கினாய்
பொறுமையாய் இருந்ததால்
பூக்காடாயிருந்த பூலோகத்தை
புதை குழிக்குள் புகுத்தி விட்டாய்
இரசாயனங்களால் மண்வளம் கெடுத்தாய்
கலப்பினங்களால் மரபு அழித்தாய்
ஆயுதங்களால் என் மீது போர் தொடுத்தாய்
ஆராய்ச்சி என்ற பெயரில்
அணுகுண்டு சோதன
என்னுள்ளும் நடத்தினாய்
என்னுடைய துன்பத்தை
எப்படியேனும் வெளிக்காட்ட
ஏதேதோ அவதாரம்
எடுத்தேன் நானும்
புயலாய் பூகம்பமாய்
வெள்ளமாய் வெப்பமாய்
கதிர்வீச்சாய் கடல் சீற்றமாய்
எதையும் பொருட்படுத்தாமல்
உன் செயல்கள் தொடர்ந்தாய்
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்
உலகம் செழிக்க
உலகின் உயிர்கள் வாழ
உன் சந்ததிகள் வாழ
ஏய் ஆறறிவு மனிதா
எனக்காக ஒன்றை மட்டும் செய்
எதையும் தயவுசெய்து செய்யாதே.
05 - அன்பின் மரியாதை - Anpin Mariyathai
அன்பின் மறு வடிவமே
மரியாதையாகும்.
மரியாதை என்பது உடற்செயலினால்
காட்டுவதும் மட்டுமன்றி உதட்டின்
சொற்களாலும் காட்டுவதாகும்.
மாறிவரும் உலகில் மாறாமல்
வருவது மரியாதை மட் டும் தான்
காரணம் அன்பின் மறு வடிவம் அல்லவா.
முன் அறியாத உறவுகளை கூட
உறவுமுறை என்ற உறவில்
அழைக்கிறோம், காரணம்
அனைவரையும் நேசிக்க தெரிந்த
அன்புதான் இதுவே மரியாதையாகும்.
உதட்டினை தவிர்த்து
உள்ளத்தில் இருந்து
அன்பினை வெளிப்படுத்தினால்
அன்பின் மரியாதை அதிகரிக்குமே
தவிர அடங்காது...
0 Comments