முதுமை Old Age - Essay or Article Competition - 2023 - Sltamil

முதுமை Old Age

முன்னுரை

          ’’அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

           பொன்றுங்கால் பொன்றாத் துணை”

முதுமை வரும்முன் நல்ல அறச் செயல்களைச் செய்துவிட வேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்தும் முதுமையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


முதுமையின் தோற்றம்

            வயதின் முதிர்வினால் உடல் தளர்ந்து, முடி நரைத்து, தேகத்தோடு முகமும் சுருங்கிய தோற்றத்துடன் காணப்படுவர் முதியோர்கள்.அவர்களுக்கு கண் ஒளி குன்றி , செவிப்புலனின் திறனும் சற்று குறையும்.’உணவே மருந்து’ என்ற நிலை ’மருந்தே உணவு’ என்று மாறும். உண்கின்ற உணவு எளிதில் செரிக்காது.வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல உபாதைகள் ஏற்படும். இளமைப் பருவத்தில் நன்றாக சுறுசுறுப்புடன் இருந்தவர்கள் முதுமையில் மூட்டுவலி,முதுகுவலி ,நரம்பு தளர்வினால் துணைக்கோலைத் தேடுவர்.தன்னால் எதையும் செய்ய முடியாமல் மற்றவர்களின் உதவியை நாடுவர். அன்பும்,அரவணைப்பும் எதிர்பார்த்து வேண்டும் அவர்களுக்கு கிடைப்பதோ தனிமையும் மனக்கசப்பும்தான்.இக்காலத்தில் அவர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது.


முதுமையின் சிறப்புகள்

              காலத்தினால் வயது பல கடந்து இளமையிலிருந்து முதுமை நிலையினை அடைந்த முதியோர்கள் தான் வாழ்ந்த காலத்தில் பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றிருப்பர். பல கஷ்டங்கள், கவலைகள்,பொருளாதார சிக்கல்களை மனம் தளராது எதிர்கொண்டு நம்மை வளர்த்திருப்பர். அவர்களின் அனுபவங்களும் ,சிறந்த அறிவுரைகளும் நம்மை இந்த வாழ்க்கையில் சிறப்புடன் வழிநடத்தும்.ஆனால் அவர்களின் அறிவுரைகள் இன்று நீரில் எழுதிய எழுத்துக்களாகவே கருதப்படுகிறது.இலவசமாக கிடைக்கும். முதியோர்களின் அறிவுரைகளை புறம்தள்ளி மனநல மருத்துவர்களிடம் பணத்திற்கு அறிவுரைகளை கேட்கும் நிலை வந்துவிட்டது.


முதியோர் பாதுகாப்பு

                   நாம் பிறந்ததிலிருந்து நம்மை தன் கண்மணிபோல் பாதுகாத்து , அனைத்தும் கொடுத்து, நல்வழியைப் போதித்து நல்ல ஒரு மனிதனாக மாற்றும் பெற்றோர்கள் வயதின் முதிர்வினால் மீண்டும் குழந்தையாக மாறுகின்றனர்.நாம் குழந்தையாக இருக்கும்போது நமக்குக் கிடைத்த அளவில்லா அன்பும்,அரவணைப்பும்,பாதுக்காப்பும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் அவர்களின் நிலையோ இக்காலத்தில் தனிமையில் முதியோர் இல்லத்தில் தான் அமைகிறது.தான் பெற்று வளர்த்த பிள்ளை தன்னை எதையும் பார்க்காமல் ஒதுக்குவது அவர்களை மிகுந்த துயரில் ஆழ்த்துகிறது. ஆக்சிஜனின் அருமை எப்படி உயிருக்குப் போராடும்போது தெரியுமோ, அதுபோல முதியோர்களின் அருமையும், பெருமையும் அவர்கள் இல்லாதபோது தான் தெரியும்.


முடிவுரை

                முதுமை வரும்முன் நல்ல செயல்களை செய்ய வேண்டும். அந்த நல்ல செயல் முதலில் முதுமை நிலையை அடைந்த தங்கள் பெற்றோர்களை அன்புடன் பேணிப்பாதுகாத்தல் ஆக இருக்கட்டும்.”தாயிற் சிறந்த கோயிலுமில்லை”,தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்பது அவர்களின் முதுமையிலும் நமக்கு நினைவிருக்கட்டும்.முதுமை என்பது சாபம் அல்ல. நம்மை வரமாக பெற்றவர்களுக்குக் கிடைத்த வரம்.

நன்றி - சு.ஜெயபாண்டி

வணக்கம் நண்பர்களே!

நமது கட்டுரை தளத்தில் இந்த வருடம் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கட்டுரையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.

கட்டுரை கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments