கலைந்த கனவு சிறுகதை போட்டி. Short Story Competition Dissolved Dream - 2023 - Sltamil

Short Story Competition Dissolved Dream - 2023 - Sltamil

    கிராமத்து இரவு என்பது மிக  ஆழமானதும் நிசப்தமானதும்.பகல் முழுவதும்  பாடுபட்டவர்கள் மூச்சு விடும் பிணங்கள் போல கிடக்கும் நேரம்  அது..

   அப்படியான  இரவிலும், வானில் விளையாடும் நட்சத்திரங்களையும்,அதனை விரட்டி வரும் அம்புலியையும் பார்த்து தன்னை மறந்து கிடக்கிறான் சயந்தன்.


   உடல் இங்குள்ளது அவன் உயிரில்லை.இதயம் அவனிடம் உள்ளது அந்த இதய துடிப்பு அவன் வசமில்லை.இரவின் நிசப்தம் அவனை வாட்டுவதை விட முருகனின் திருக்கல்யாண கோலம் அவனை வாட்டி எடுக்கிறது. அதற்கான காரணம் நாளை அவனுக்கு நடக்க இருக்கும் திருமணம்.அவனுடைய பல நாள் ஆசையே! பேராசையே! நிறைவேறும் ஆர்வத்தில்,கர்ணனை விட ஒரு படி மேல் சென்று  தூக்கத்தையும் தானம் செய்து விட்டான் இரவுக்கு...

  

   வெள்ளைக்கார துரையிடம் வாடகைக்கு வாங்கி வந்தாலோ தெரியாது செல்லத்தாயி ?.அவன் அப்படி ஒரு நிறம். சுண்டினால் செவக்கும் சதை அவனுக்கு. கம்பீரமான  தோலில் மண்வெட்டி எடுத்து வச்சி கஞ்சி சட்டி தூக்கி விவசாயம் செய்ய நிலத்துக்கு போற வரைக்கும் ஊர பெண்களின் கண் அவன் மேல் தான். மீசை துளிரும் அவனுக்கு அவள் மேல் ஒரு "அது ".


ஊரே அவனை பார்த்தால்,அவன் பார்த்தான்.அவளும் அழகில் சலிச்சவள் இல்லை ,மாநெறத்தழகி,கல்லை கூட  உருக்கும் பேச்சழகி,நெருப்பு பொறி என்ன பிரகாசம் அவளின் கண் அதையொல்லாம்  தாண்டிய பிரகாசம்.ரோசா பூ சின்ன பிஞ்சுகை,கால்ல போட்டு கொளுசு அழகா அவ மாநெற கால் அழகானு சந்தோகம் தான். தல நெறய பூ வச்சா,அந்த பூவுக்கு மோட்சம் தான். வளைந்த நெத்தில சிவப்பு பொட்டு வச்சி,மஞ்ச முகம் சிரிச்சா தேவதையே பொறாமைப்படும்.

பெரிய வீட்டு பெண்ணுனா சும்மாவா?..பல பெரிய சம்பந்தம் வந்தும்' வேணாம்னு சொன்னவ,அன்னைக்கு கோயில்ல வச்சி " ஒரு கவித சொல்லு சயந்தா" னு 'சீனு சொன்னத கேட்டு. இவ முன்ன போக " நா மொத மொத ஆசைப்பட்டு  சொன்ன கவித இவ பெயறுனு "சொல்லி சிரிக்க,அவளும் வெக்கப்பட. அடிச்சது இரண்டு பேருக்கும் பேய்க்காத்து..


நெருங்கிய சொந்தக்காரவுங்க இறந்துட்டாங்கனு தெரிஞ்சு.பக்கத்து ஊருக்கு  அவசரமாக கிளம்பினான் சயந்தன்.


  அவன்  அங்கிருந்தாலும் அவன் மனம் அவளிடத்தில் .எப்படி நிம்மதி கிடைக்கும்?. சீக்கு விழுந்த ஆடு மாதிரி செருமிக்கிட்டே இருக்கு அவன மனசு. இதுல " என்னியப் பாடப் பாடுத்திறியோடி பாதகத்தினு "அப்ப சிரிக்கிறான் வேற. "கண்ண மூடினா மூஞ்சியில வந்து முட்டிட்டு போகுது லச்ச கெட்ட பச்ச தாவணினு" பொலம்பித் தவிக்கிறான்.

  இவன் பாடுதான் இப்படினா? அவ பாடு இன்னும் மோசம்.

கும்மிக்கொட்டி கூத்தடிக்குது அவ மனசு.மொளகா கடிச்சா இனிக்குது, மொத்த கூழையும் கடிச்சு கடைசிவாய் கூழ் குடிக்கும் போது தான் உப்பு இல்லனு தெரியுது.உச்சி வெயில்ல நடந்தாலும் அவன் நெனப்புல நடக்கும் போது ஒடத்தண்ணி குறுகுறுனு உள்ளங்கால்ல ஒடுற மாதிரி குளு குளுன்னு இருக்கு.

ஊர் திரும்பிய சயந்தன் அவளை பார்க்க எவ்வளவு முயற்சி பன்னியும் முடியல.அந்த கவலையில் அவள நெனச்சி உக்காந்தான் கோயில் சந்தியில் குப்பக்கூளம் கொழுத்திக் கூத காய்ற சின்னஞ்சிறுசு பக்கத்துல.அவளும் அதுல குப்பைய கொட்ட, குப்ப கூளங்களிலிருந்த கசருகளொல்லாம் பொசு பொசு னு புகையாகி பனி முட்டத்தோடு கலக்க கொஞ்ச நேரத்தில் குபுக்கென்று பற்றி கொண்ட நெருப்பின் வெளிச்சத்தில் முகம் பார்த்து மூச்சு விட்டுக் கொண்டன ஒண்ண ஒண்ண தேடி அலைஞ்ச உசுருகரெண்டும்.என்னத்தப் பேசுவான் இவன்? என்னத்த பேசுவா அவ?, கண்ணுல காதல் ஒழுகுதுனு மட்டும் தெரியுது அவனுக்கு, அவன் ஒதட்டுல உசுறு துடிக்கிறது மட்டும் தெரியுது அவளுக்கு..


   என்ன இருந்தாலும் பெரிய வீட்டுப் பெண்னு,பல நாள் போச்சி ஊர்வாய அடக்க முடியல.அவ வீட்ல பல எதிர்பு.இவன் வீட்ல ஏதே புள்ள நல்லா இருக்கட்டும்னு விட்டுடாக.அவ வீட்ல  அப்படியில்ல இருந்தாலும் தண்ணில கரையாத சீனியா? பிள்ள பிடிவாதத்துல கரையாத அம்மா? அப்பாவா?.அதனால தான் நாளைக்கு திருக்கல்யாணம் முடிய எங்க கல்யாணம்னு சொன்னாங்க.


   அவளுக்கு ஒரு மெறபைறன் இருக்கான்.கிட்ட போனாலே சாராய வாட குப்னு அடிக்கும்.அவனுக்கு அவ மேல ஒரு மோகம். நெனச்சாலே கோவம் தான் வருது.பல முற அவள தொந்தரவு செஞ்சி அடிவாங்கி இருக்கான்.இருந்தும் திருந்தின பாடு இல்லை.

 அவள நெனச்ச பொழுது வெளிச்சமும் வந்துருச்சு. இருட்டுக்கு இன்னும் அவள பத்தி கேக்கனும் போல மல்லுக்கு நிக்குது சூரியன்கிட்ட. அது வேற ஒரு உலகம். பூமி பரப்பில் இன்னொர் கிரகம் அது.

செம்மண் காட்டில் பச்சைத்தீப் பிடிச்சமாதிரி வளர்ந்து நின்றது நெல்.இரவெல்லாம் மழையாடி அதிகாலை வெயிலாடி,குளித்து தலையுயர்த்தும் பருவப்பெண்னாய் செழித்து நின்றது ஊரே ஒரு வசீகர வனப்போடு.நெலில் உருண்டு தேங்கி நிற்க்கும் மழைத்துழிகள் காற்றின் தள்ளலுக்குத் தாங்காமல் காற்றின் தள்ளலுக்குத் உருண்டு விழுந்து புல்லின் பன்னித்துளி உடைத்து சங்கமமாகும் நேரம் அது..


   கோவிலின் ஆராவாரச்சத்தம் ஊரைக் கிழிக்கிறது.கந்தனின் திருக்கல்யாண கோலம் காண பல கண்கள் ஏங்குகிறது. இருந்தும் அவன் கண் அவளையும், அவள் கண் அவனையும் காண இமைக்கிறது.

ஒரு வழியா வந்துச்சு அந்த நேர்.

செவப்பு கூரப்பட்டு கட்டி கனகாம்பரம்  மல்லிப்பூ சேத்து வச்சி,கண்ணுக்கு கருப்பு மைதீட்டி செவப்பு பொட்டு வச்சு,கை நிறய கலர் கலரா கண்ணாடி வளையல் போட்டு,ரோசா பூ கையில மருதாணி செவக்க வச்சி வணக்கம் சொல்லி வந்தா பாரு.. அவள பாத்த அந்த நொடி நிண்டு போச்சி அவன் உலகம்.


      அந்த ஒரு நொடி திடுக்கிட்டது கோயில் அரங்கம்.குடி போதையில் தல்லாடி தல்லாடி வந்தான் அவன்." கல்யாணமா? அப எனக்கு பெண்னு, ஒழுங்கா கட்டி வை இல்லன்னா வெட்டுக்குத்து தான்".. என்று பெரிய சண்டையை வாடகைக்கு  இழுத்தான்.அவளை அடித்து அழங்காரம் கலைத்தான்.கை பிடித்து இழுத்தான்.இதை பார்த்து தன்னிலை மறந்த சயந்தன்,தேங்காய் கொண்டு எறிய.அது அவன் இரத்த் பாரத்து தரையில்  சிதறியது.அவ்வளவு தான் பய சொலண்டு விழுந்துட்டான்.


வந்திருந்த பொலிஸார் கைவிலங்கு பூட்ட கை வளையல் உடைய அழுதாள் அவள்.பட்டு வேட்டியிலிருந்த அவனை பார்த்து .ஜுப் வண்டியில் ஏறிய அவனின் வேஸ்டி காற்றில் " போயிட்டு வாரேஞ்சாமி  போயிட்டு வாரேஞ்சாமி"னு படப்படத்து  புலம்பியது.வண்டி பின் கதறி ஒடிய அவளை ஊரே சேர்ந்து  நிறுத்தியது.

      அன்று அவனுடன் குளிர் காய்ந்த நெருப்பின் முன்,அவன் வருவான் என்ற நம்பிக்கையில் கலைந்த கனவுடன் கலங்கி அமர்கிறாள் மீனாட்சி.....

நன்றி - ᴍ.ᴘʀɪʏᴀ ʀᴏʜɪɴɪ

வணக்கம் நண்பர்களே!

நமது சிறுகதை தளத்தில் இந்த வருடம் சிறுதைப் போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் சிறுகதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் சிறுகதைகளை அனுப்பி வைக்கலாம்.

சிறுகதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments